பாண்டியர் காலத்தில்,அரசர்கள் வாழ்ந்த பெருநகரக் கோட்டைக்குள் உள்ள கோவில்களில், தலைமைப் பண்டாரம், திருவமுதுப் பண்டாரம், நெட்டோதற் பண்டாரம், அலங்காரப் பண்டாரம், அம்பலகாரப் பண்டாரம், கங்காணிப் பண்டாரம் என்றழைக்கப்படுவோர், கோவில் திருப்பணிகள் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
பண்டார தீட்சை பெற முழுத்துறவு நிலை!
1. தலைமைப் பண்டாரத்தார் மட்டுமே கருவறைத் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்களாக இருந்தனர். இவர்கள், சிறுவயதுமுதலே துறவுபூண்டு, குருகுலத்திலேயே தங்கியிருந்து, குருவிடம் சித்தபெருமானார்களின் அறிவுசார்ந்த சிவ, முருக ஆகமவிதிகளைக் கற்றுணர்ந்தவர்கள். இவர்கள், மருதநிலத்து வேளாண்குடியில் பிறந்தவர்களாக இருப்பர். குருகுலத்தில் இராஜயோக, கர்மயோக, ஞானயோக, பக்தியோகப் பயிற்சிகளைப் பெற்று, அதன் பலனாக -
* பாவ உதிர்ப்பு
* புண்ணிய உதிர்ப்பு
* பொருள் உதிர்ப்பு
* உணர்வுதிர்ப்பு
* குணவுதிர்ப்பு
* மனவுதிர்ப்பு
ஆகிய அறுவகை உதிர்ப்புகளையும் தன்னுள் உருவாக்கிய நிலையில், குருநாதரால் முழுத்துறவுநிலை பெற வழங்கப்படும் பண்டார தீட்சையைப் பெற்றவர்கள். இப்பண்டார தீட்சையைப் பெற்றபின், அதற்கு அடையாளமாகத் தலையை மழித்து, காயகட்சை கட்டி, தலையிலும் கழுத்திலும் கைகளிலும் அறுமுக உத்திராட்சம் கட்டி, பெரிய கோவில்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்குத் தகுதியுடையவர்களாகிவிடுவர். இவர்கள், குருமடத்தில் தங்கிக்கொண்டு அனுஷ்டாங்கம் தவறாமல் பூஜைகள் செய்து வருவர்.
2. அடுத்து, திருவமுதுப் பண்டாரம் எனப்படுபவர் வேளாண்குடியில் பிறந்த வராகவே இருப்பர். இவர்கள், கோவிலிலுள்ள இறைவர்களுக்குப் படைக்கக்கூடிய தூய்மையான அன்னம், பஞ்சாமிர்தம், பால், பழங்கள் முதலிய தளிகைகளை, உணவு சமைக்கும் மடப்பள்ளியிலிருந்து தயார் செய்துகொடுத்து தலைமைப் பண்டாரத்தாரின் பூஜைக்கு உதவுவர்.
3. நெட்டோதற் பண்டாரம் அல்லது ஓதுவார் அல்லது முன்னிசைப் பாட்டோன் என்பவரும் வேளாண்குடியில் பிறந்தவ ராகவே இருப்பர். இவர்கள், கோவிலில் பூஜைகள் நடைபெறும் சமயங்களில் சிவ, முருக துதிப்பாடல்களைத் தமிழ்ப்பண்களில் பாடி, கேட்போரின் மனதை உருக்குவர். பழங் காலம் தொட்டு இன்றுவரையிலும் இவர்களா லேயே தமிழ்ப்பண்கள் உயிரோடிருக்கின்றன. இவர்கள் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, சீகாமரம், காவடிச்சிந்து, நட்டபாடை, கொல்லி, சாதாரி, பியந்தைக் காந்தாரம், பழந்தக்க ராகம், செந்துருத்தி, தக்கேசி, பழம்பஞ்சுரம், இந்தளம், கொல்லிக் கௌவானம் போன்ற பண்களை, குருகுலமடத்தில் சிறு வயதிலிருந்தே கற்றுத் தேர்ந்து, சீர்தூக்கி தமிழ்ப்பண்களைப் பாதுகாத்து வரு கின்றனர். மேற்கண்ட பண்களில் சைவ நாயன்மார்கள் தாங் கள் இயற்றிய சைவத் திருமுறைகளைப் பாடி அமைத்ததாலேயே இன்றும் இப்பண்கள் கோவில்களில் உயிர்ப்புடன் இருக்கின்றன.
4. அம்பலகாரப் பண்டாரம் என்பவர், கோவில் கருவூலத்தைப் பாதுகாத்து, இறையிலி நிலங்களிலிருந்து வரும் நெல்தானியங்கள், மன்னர்களால் சாசனப் படுத்தப்பட்டு குடிமக்களிடமிருந்து வசூலிக் கப்படும் பணம், தானிய வகைகள், நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பொன்மணி ஆபரணங்கள் போன்றவற்றை கோவில் தானியக்கிடங்கு மற்றும் ஆபரணங்களைப் பாதுகாக்கும் பண்டார அறையில் வைத்துப் பாதுகாத்து, நித்த பூஜை மற்றும் திருவிழா பூஜைகளுக்கு, தேவையான நேரங்களில் தேவையான அளவு முறைப்படுத்தி வழங்குவர். இவர்கள் பெரும் பாலும் மன்னர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
5. கண்காணிப் பண்டாரம் எனப் படுவோர், குருமடத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். பூஜைக் காலங்களில், பூஜைக் குத் தேவையான மாலைகள், பொன்னாப ரணங்கள், தளிகைகள், இன்னிசை வாத்தியங் கள், பாடல் போன்றவற்றை சரியான நேரத் தில் ஒருங்கிணைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்களை சிறப்புறச் செய்வதற்கு உதவுதலே இவர்களின் தலையாய கடமை யாகும். இரவு நேரத்தில், கோவில் முழுவதும் சுற்றிப் பார்த்துக் கண்காணித்துவிட்டு, கோவிலைத் திருத்தாழிட்டு, திறவுகோலைத் திருமடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் நடைதிறந்து, கோவில் பூஜைகளுக்கு இவர் கள் உதவுவர்.
6. அலங்காரப் பண்டாரம் என்பவர், முல்லை நிலத்தவராவர். நந்தவனம் மற்றும் பூஞ்சோலைகளைப் பராமரித்து, அவற்றிலிருந்து பூக்களைச் சேகரித்து, நாள்தோறும் கோவிலுக்குத் தேவையான மலர் ஆரம், மாலை, மலர்ச்செண்டு தோரணம் போன்றவற்றைத் தயாரித்து உதவுவதே இவர்களின் கடமையாகும். இவர்கள், மலர் அலங்காரம் செய்வதில் வல்லவர்கள். ஆதலால், பலியிட்டு வழிபாடு நடத்தும் நாட்டார் சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களில், இவர்கள்தான் ஆதிகாலத்திலிருந்து பூசகர்களாகப் பணிசெய்து வருகின்றனர்.
குயவர்களே பூசாரிகள்!
சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களில் சுதையால் தெய்வ உருவங்கள் செய்யப்பட்டி ருந்தால், அக்கோவில்களில் குயவர்களே பூசாரிகளாக இருப்பர். ஆதிகாலம் தொட்டு இந்த நடைமுறையே உள்ளது. ஏனெனில், சுதைச் சிலைகள் அடிக்கடி சேதப்படும்போதெல்லாம் அதனை உடனுக்குடன் செப்பனிட்டு சீர்செய்ய இவர்களாலேயே முடியும். ஆகவே, அவ்விடங் களிலெல்லாம் குயவர்கள் பூசாரிகளாக இருந்துவருகின்றனர்.
பாண்டியர் காலத்தில், மதுரை சொக்கநாதர்- மீனாட்சியம்மன் கோவிலில் பூசகர்களாக இருந்தவர்கள் பண்டாரத்தார்களே. இவர்கள், சைவமடத் துறவிகளாகவும் இருந்தனர்.
வைணவக் கோவில்களில் துறவியாக இருந்து பூஜித்தவர்கள் "மகந்து' என்றழைக்கப்பட்டனர்.
கடந்த இதழில், குருநாதர் சந்நிதியில் இளவலுக்கு சீர்திறந்த நிலையில் இளவலானவன் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டதைப் பார்த்தோம். எனவேதான் குடிமக்கள், தங்களின் இறைவனாகத் தங்களை ஆளும் மன்னவனே இருப்பதால், இறைவன் என்ற பதத்திற்கு "ஆண்டவன்' எனப் பெயரிட்டனர்.
வாலைகுருநாதர் சந்நிதியில் தலைமைப் பண்டாரத்தார் திருப்பூஜையைத் தொடரும் போது, கானமழையாய் நெட்டோதற் பண்டாரம் வாலைகுருநாதரின் சிறப்பியல்புகளைப் போற்றி, நாதசுர இசையோடியைந்து மெய்ம்மறக்கப் பாடி,. பின்தொடர்ந்து இளவலையும் வாழ்த்திப் பாடுவார்.
அலங்காரப் பண்டாரம் கொண்டு வந்திருக்கும் மணம்வீசும் மலர்மாலை மற்றும் மலர்ச்செண்டு அலங்காரத்துடன் கூடிய வாலைகுருநாதரின் அழகை- தத்ரூபமாக உயிர்பெற்ற இறையனாராய் அமர்ந்துள்ள கோலத்தைக் கண்டு மெய்ம்மறந்த நிலையில் இளவல் வணங்கி நிற்கும்போது, குருநாதர் மிக உயர்ந்த, இருபுறமும் செண்டுகள் தொங்கும் நிலைமாலையை இளவலுக்கு அணிவிப்பார். தலைமைப் பண்டாரத்தார் பூஜித்துக் கொணர்ந்த இறைமங்கலப் பொருட்களைத் தூவி, வாலைகுருநாதரிடம் வைத்து வழிபட்டுத்தந்த வீரத்தொடியை’ இளவலின் முருகு இயங்கும் அழகிய தோள்களில் பூட்டுவார். குருநாதரின் நிறைவான ஆசிர்வாதம் கிடைத்தவுடன், கோவிலின் வெளியே இளவலுக்காகக் காத்தி ருக்கும் பட்டத்து யானையின் முகத்தில், வேளக் கோளர்கள் எனப்படும் அரச குடும்பத்தினரின் மெய்க்காப்பாளர்கள், ரத்தின மணிகளால் நெய்யப்பட்டுள்ள முகப்பாடத்தை அணிவிப்பார்கள். அதன் முதுகில் யானைப் பாகர்கள் பொற்பட்டம் அணிவித்ததும், வீரச்செருக்குடன் யானையின் இருபுறமும் கொற்றவர்கள் அணிவகுத்து நிற்பார்கள். குருநாதர்முன், விண்ணெழும் மலைபோல் நிற்கும் இளையகோன், அவருக் குத் தலைவணங்கி, குறுகிய குன்றமாய் விடை பெறுவான்.
சேனாதிபதிகளாக முத்தரையர்கள்!
இதுவரையிலும் தனக்காகக் காத்திருந்த முத்தரைய சேனாதிபதியை நோக்கி இளவல் திரும்பியவுடன், இளவலுக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்திலிருந்து விண்ணதிர எழும் "கம்பலை ஓசை', பூமியை அதிரச் செய்யும். கம்பலை என்பது பெரும் கூட்டத்தில் வாணவெடியுடனும் எக்காள முழக்கத்துடனும் அனைத்துவகை வீரமுரசுகளும் முழங்கிட, சங்கங்களும் பேரிகைகளும் கொம்புகளும் ஒன்றுசேர முழங்கும்போது ஏற்படும் பேரதிர்வு முழக்கமாகும். ஆதிகாலம் தொட்டு, பாண்டியர் களுக்கு சேனாதிபதிகளாக இருந்தவர்கள் முத்தரையர்களே!
இளையமகனின் வீறுகொண்ட வெற்றி நடையோடு, சேனாதிபதி அவனது வலக்கரம் பற்றிப் பணிவோடு வழிகாட்ட, கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு ஆணவப்பட்சியாய் தலைநிமிர்ந்து, தோள்களில் வீரத்தொடிகள் குலுங்க, மார்புக் கவசத்தை விஞ்சும் அளவிற்கு மார்புகள் திமிர, வைரமணிச்சரங்கள் குலுங்கி ஒலிபரப்ப, பகைவர்கள் அஞ்சி நடுங்கும் அழகுடை வீரநடையிட்டு வரும்போது அதிரும் வீரக்கழல்களின் ஒலிகேட்டு, சீர்பாதந்தூக்கிகள் கூட்டத்தினரிடமிருந்து விரைந்தோடி வந்து, யானைமீது இளவல் அமரவிருக்கும் பொன்மணிகளால் வேயப்பட்ட அம்பாரியைச் சுற்றிப் புடை சூழ்ந்து, அதனை வானளாவித் தூக்கிச்சென்று இளவலின் பாதத்திற்கு முன்வைத்து, அனைவரும் மண்டியிட்டு வணங்கி நிற்பார்கள்.
பொன்மலையைப் பூக்கூடைக்குள் வைத்ததுபோல், சேனாதிபதி இனிமை கலந்த புன்சிரிப்புடன், அம்பாரிக்குள் இருக்கும் சிம்மாசனத்தில் இளவலை அமரவைத்து, வான் நோக்கி கைகூப்புவார். அதனைக்கண்ட சீர்பாதந்தூக்கிகள், அம்பாரியை மெல்ல மெல்ல வான்நோக்கித் தூக்கி உயர்த்துவார்கள். அம்பாரிக்குள் இளவலைப் பார்த்த கைக்கோளர்கள், நீண்ட இடைவெளிக்குப்பின் பார்த்ததும் அளவளாவும் உறவுகளைப்போல் விரைந்தோடி வந்து அம்பாரிக்குமுன் மண்டியிட்டு, நெடுங்குன்றம்போல் அமர்ந்த பட்டத்து யானையின் முதுகில் அம்பாரியை லாவகமாக வைத்துப்பூட்டி, சரிபார்த்து விலகிநிற்பார்கள், சீர்பாதந்தூக்கிகள். இவர்கள், அரச குடும்பத்தினரின் பல்லக்குகளைத் தூக்கிச் செல்பவர்கள். அரச குடும்பத்தினருக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள்.
அவர்கள் வெளியில் பயணம் செய்யும்போது மெய்க்காப்பாளர்களாகத் திகழ்பவர்கள்.
இளவலை அம்பாரியில் அமரவைத்தவுடன், தனக்கென உள்ள புரவியின்மீது அமர்ந்து, பட்டத்து யானைக்குமுன் நின்று கையசைத்த தும், பட்டத்து யானை மெல்ல மெல்ல எழுந்து பூப்போல் சேனாதிபதியைப் பின்தொடரும். யானையின் இருபுறமும் வேலேந்திய வீரக்கொற்றவர்கள், மக்கள் கூட்டத்தை யானையின் கால்களுக்கருகே அணுகவிடாமல் செய்து, இடைவிடாது தொடர்வார்கள்.
யானை எங்கே செல்லும்?
பகைவர்கள் அஞ்சி நடுங்கும் பேரழகைத் தான் "முருகு' என்பர். பகைவர்களுக்கு மரண பயத்தைத் தரும், அகங்காரத்துடன் கூடிய பேரழகுடையவனுக்குதான் முருகன் என்று பெயர். இது சாதாரண அழகல்ல. பகைவர் களுக்கு மரணபயமளிக்கும் அழகுடையவன் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே, மரணத்தின் அடையாளமான மயிலையும், ஆங்காரத்தின் அடையாளமான சேவலையும், தனது சின்னங்களாகக் கொண்டுள்ளான். அவனே பாண்டியனின் முன்னவனாகத் திகழ்ந்தவன்.
அவனைக் கந்தன் என்றும், நெடியன் என்றும், முத்தையன் என்றும், முருகன் என்றும், ஆழ்ந்த கன்ற நுண்ணியனான வேலோன் என்றும், அவன் இருக்கும் கோவிலைக் கந்தக்கோட்டம் என்றும், வேல்கோட்டம் என்றும் அழைப்ப துண்டு. அதனை நோக்கியே இளவலின் பட்டத்து யானை செல்லும்.
அடுத்த இதழில்
இனி, நாமும் வேல்கோட்டம் செல்வோம்!
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்